புத்திசாலிகளும் சிந்தனையாளர்களும்…

மார்ச் 3, 2010 at 12:57 பிப (சொற்பொருள்) (, , , , , )

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு என்று எனது நண்பர் ஒரு முறை என்னிடம் சொன்னார் அது “inteligent people are poor thinkers”. இதைப்பற்றி கொஞ்சம் சிந்தனை செய்த பொது எனக்கு தோன்றியவை இங்கே எழுதி வைக்கலாம் என்று நினைத்தேன். அதுவே இந்த இடுகைக்கும் உங்களை தொந்தரவு செய்வதற்கும் காரணம்.
 
சிந்தனையாளர்கள்…
 
சிந்தனையாளர்களை வரையறை செய்ய முயன்ற போது சிந்தனையை வரையறை செய்வதற்கான தேவை எழுந்தது. சிந்தனை என்றால் நமக்கு தெரிந்த தகவல் / செய்திகளை அடுக்கி அதிலிருந்து ஒரு முடிவை எடுக்க முயற்சிப்பது என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
 
சிந்தனையின் பயன்கள் எனும் போது மிக அதிகமான சாத்தியக் கூறுகளை வைத்து முடிவெடுப்பது, இதில் முடிவெடுப்பது கால தாமதமானாலும் முடிவு பெரும்பாலும் தவறாக இருப்பதில்லை. ஆனால் அந்த முடிவெடுப்பதற்கு ஆகும் கால தாமதம் சில நேரங்களில் ஆண்டுக்கணக்கில் (சிலருக்கு வாழ்க்கைத் தேடலாகவும்) கூட ஆகலாம். ஆனால் அப்போது கிடைக்கும் பலன் பல படிகளை ஒரே அடியாக தாவுவதற்கு வழிவகுக்கும்.  
 
இப்போது சிந்தனையின் பிரச்சினையை அடுக்க முயன்றால் அதிலேயே சிந்தனையாளர்களின் பிரச்சினையை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன்.
 
நமது மூளையின் செய்தி / தகவல் களஞ்சியத்தை ஒரு முடிவெடுக்க அலசும் போது அது ஏறக்குறைய ஒரு கூகிள் தேடுபொறியின் கண்டுபிடிப்பைப் போலவோ அல்லது அதற்கு அதிகமான தகவல்களையோ / செய்திகளையோ தருகிறது. இப்போது நம்முடைய அடுத்த கவலை இதில் எது நமக்குத் தேவையானது எது தேவையற்றது என்பதை மேலும் தேடுவது. நாம் ஒரு செய்தியை பிடித்து தேடும் போது அதில் நமக்கு மேலும் கிளைகள் கிடைக்கிறது, இவ்வாறு நாம் கிளைகளை பிடித்து முன்னேறி முன்னேறி ஒரு சில கிளைகளுக்கு பிறகு அது நமக்கு பயன்படாது என்று அறிவோமானால் அதற்கு ஆகும் நேர விரயம் நமது முடிவெடுக்கும் நேரத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் நமக்கு தேவையான செய்திகள் / தகவல்கள் (அல்லது துணைத் தகவல்கள்) நம்மிடையே இல்லாமலும் ஆகலாம் அப்போது நமக்கு மேலும் அந்த செய்திகளைப் பற்றி அறிய இன்னும் கூடுதலாக காலம் தேவையாகிறது. 
 
மற்றொரு பெரிய பிரச்சினை ஒரு முடிவு எடுக்கும் போது நாம் ஒரு கருத்துக்களை நம்பிக்கையின் அடிப்படையில் (assumption இதற்கு தமிழில் என்ன சொல்?) எடுத்து இருப்போம், நாம் ஒரு சில கிளைகளின் ஆழத்திற்கு செல்லும் போது அந்த நம்பிக்கைகளை உண்மையாக கருதத் தொடங்கிவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது (இதை பொதுவுடைமை, இந்துத்வா சிந்தனையாளர்களிடம்   அதிகம் பார்க்கலாம்) அது நம்மை மிக எளிதாக ஒரு தவறான தீர்வை நோக்கி இட்டுச் செல்லும். அந்த தீர்வுகள் பேரழிவுக்கு கூட இட்டுச் செல்லக் கூடும். பெரும் பாய்ச்சலாக அதிகமான படிகளை பாய்ந்தது போல தோற்றம் அளித்தாலும் அந்த ஏணி அதைவிட பெருமளவு கிழே இறங்கி இருக்கும். இவற்றில் நாம் கவனமாக பார்க்க வேண்டியது அந்த நம்பிக்கை உண்மையாக இருந்திருந்தால் அதைவிட சிறப்பான ஒரு முடிவை நாம் அடைந்து
இருக்க முடியாது என்பதே (இதில் இந்துத்வாக்களின் சிந்தனை பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை). அதனால் சிந்தனையாளர்களுக்கு உண்மையையும் நம்பிக்கையையும் 
எப்போதும் கவனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும். 
 
புத்திசாலிகள்…
 
புத்திசாலிகளை வரையறை செய்ய முயற்சித்த போது அது இவ்வாறு எனக்குள் உருப்பெற்றது. “ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் (சிறிய முடிவோ பெரிய முடிவோ) அவர்களின் அனுபவத்திலிருந்து அதிகம் குழம்பாமல் ஒரு முடிவை எளிதில் அடைந்து விடுவர்”. இதில் அதிகமான விழுக்காடு பொருந்துவதாகவே இருக்கும். அவ்வாறு இருப்பதினால் அவர்களுக்கு கிடைக்கும் வெற்றியின் விழுக்காடும் அதிகமாகவே இருக்கிறது. மேலும் தவறாகிவிட்டாலும் கூட அதை சரி செய்வதற்கு அந்த அனுபவத்திலிருந்தே அடுத்த முடிவை எடுக்கின்றனர். இதை செய்வதற்கு ஆழமான சிந்தனை அவர்களுக்கு தேவை இருப்பதில்லை அதனால் தேவையற்ற நேர விரயம் தவிர்க்கப்படுகிறது.
 
இதனால் கிடைக்கும் பயன் அதிகமான வெற்றிகள் அதனால் வாழ்க்கையில் உயர்ச்சி. ஒவ்வொரு முடிவையும் ஒரு படி என்று கொண்டால் நான்கு படிகள் ஏறிய பின் ஒரு படி இறங்குதல். இப்படி செல்லும் போது அவர்களின் வளர்ச்சி அதிகமாகவும் ஓரளவிற்கு சீராகவும் இருக்கிறது.
 
இதனால் வரும் பிரச்சினை சிந்தனை குறைவினால் ஏற்படும் தவறான முடிவுகளை தவிர்க்க முடியாமை. மேலும் அவர் எடுத்த முடிவை விட இன்னும் அதிகம் பலன் தரக்கூடிய ஒரு முடிவை சிந்தனை குறைவினால் தவற விடுதல். இதன் காரணமாக இரண்டு படி ஏற வேண்டிய இடத்தில் ஒரு படி ஏறுதல்.
 
இவர்கள் எப்போதும் தனித் தனியாக இருப்பதில்லை, ஒவ்வொரு மனிதரிடமும் புத்திசாலித்தனத்தின் கூறுகளும் சிந்தனையின் கூறுகளும் கலந்தே இருக்கும் அவற்றின் விழுக்காட்டில் மற்றுமே வேறுபாடு இருக்கும். அதனால் எப்போது புத்திசாலித்தனதையும் எப்போது சிந்தனையையும் பயன் படுத்தவேண்டும் என்ற தெளிவிருந்தால் நமது வளர்ச்சி அளவிட முடியாததாக இருக்கும்.
 
எப்போது சிந்தனை எப்போது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தவேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு நாம் புத்திசாலிதனத்தை பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து.
அது எனக்கு இன்னும் முடியவில்லை…
Advertisements

2 பின்னூட்டங்கள்

 1. கோவி.கண்ணன் said,

  //மற்றொரு பெரிய பிரச்சினை ஒரு முடிவு எடுக்கும் போது நாம் ஒரு கருத்துக்களை நம்பிக்கையின் அடிப்படையில் (assumption இதற்கு தமிழில் என்ன சொல்?) எடுத்து இருப்போம்,//

  நம்பிக்கை என்பதைவிட முன்முடிவோடு அல்லது பொது புத்தியோடு, தன்னலத்தோடு எடுக்கும் முடிவு என்று சொல்வது சரி என்று நினைக்கிறேன்.
  காசு செலவு ஆகத ஒன்றில் தான் நம்பிக்கைகளின் முடிவுகள். பிரச்சனைக்கெல்லாம் சூழல் வழியாக தீர்வு காண முயற்சிப்போம்

  • Diwakar Nagarajan said,

   கோவி, நன்றி. முன்முடிவு பொருத்தமாக இருக்கிறது ஆனால் அதுவும் ஒரு நம்பிக்கையே. எப்போது ஒரு முன்முடிவு தவறாக ஆகும் என்ற ஒரு வாய்ப்பு இருந்தாலும் அது நம்பிக்கையே இல்லை என்றால் அது உண்மையாகவோ / பொய்யாகவோ மாறிவிடும். மேலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் முடிவுகள் எடுக்கப் படுகின்றன (காசு செலவு தரும் விஷயமாக இருந்தாலும், நமது ஊரில் மளிகைக் கடை அக்கௌன்ட் நம்பிக்கையின் அடிப்படையில் பெரும்பாலும் இருக்கிறதே).

Comments are closed.

%d bloggers like this: