என்னைப்பற்றி…

பிப்ரவரி 26, 2010 at 1:59 முப (என்னைப்பற்றி...) (, , )

 

என்னைப்பற்றி…

என்னைப்பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கிராமத்தில் படித்து அங்கிருந்து நகர்ந்து நகரத்திற்கு வந்து அங்கு கொஞ்சம் படித்து(?) பின்பு ஒரு போராட்டத்திற்கு பிறகு ஓரளவு நல்ல வேளையில் அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு நடுத்தர குடும்பமாக ஆகி இருக்கிறேன் அவ்வளவுதான். இதில் கொஞ்சம் போராட்டம், கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கொஞ்சம் அனைத்து உணர்ச்சிகளையும் அனுபவித்து / அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். பதிவுலக அறிமுகம்… பதிவுகளைப்பற்றி பேச்சு அடிபட்டபோது எனக்கு அதில் ஒரு பெரிய ஆர்வம் இல்லை. அது என்ன என்று தெரிந்துகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை. செய்திகளை இணையத்தில் படிக்கும் போது ஒரு தளத்தில் தமிலிஷ் இன் விளம்பரத்தைப்பார்த்து (2006) அதுவும் மற்றொரு செய்தி தளம் என்ற ஒரு நினைப்பில் அதை அழுத்தப்போக அது அந்த தளத்திற்கு இட்டுச்சென்றது. அங்கு உள்ள பதிவுகளை படிக்க அதன் பின்பு ஒவோவோருவரின் பதிவாக தேடி தேடி ஆர்வம் உள்ள பதிவுகளை படித்தேன். அதிலிருந்து இதில் உள்ள நன்மை, தீமை, அரசியல், நாட்டு நடப்பு எல்லாம் அறிய முடிந்தது. பின்பு சிங்கைநாதன் சிகிச்சையைப்பற்றி படித்த போது சிங்கைபதிவர்களிடம் (அனைவரிடமும் அல்ல, நானும் இப்போது சிங்கையில்தான் இருக்கிறேன்) தொடர்புகொண்டு பேசினேன் (நண்பர் கோவி. கண்ணன் மற்றும் ஜோசப் பால்ராஜ்). பின்பு ஒரு பதிவர் கூட்டத்திற்கும் சென்று சிலரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். அதன் பின்பு நண்பர் கோவியிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன் (எங்களது கலந்துரையாடல் ஒரு 1000 பக்கங்களுக்கு மேல் வரும் என்று நினைக்கிறேன்!!! அவர் ஒரு அல்ல அல்ல குறையாத சுரங்கம்). பல செய்திகள் / கருத்துக்கள் பற்றி விவாதம் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் செய்துகொண்டிருந்தேன். அவரின் தீராத / தணியாத முயற்சியால் இப்போது எழுத ஆரம்பித்து இருக்கிறேன். இது எனக்கோ உங்களுக்கோ நல்ல நேரமா அல்லது ஒரு கேட்ட நேரமா என்பதை காலம் (கோவி அல்ல) பதில் சொல்லும் என்ற ஒரு நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

என்ன எழுதுவது / என்ன எழுதப்போகிறேன்…

நமக்கு சாதரணமாக உள்ள ஒரு பெரும் பிரச்சினை இதுதான் என்று நினைக்கிறேன். இதிலிருந்து நான் விடுபட முதலில் எனது நோக்கத்தை முடிவு செய்யவேண்டும். அதை செய்ய முயற்சிக்கிறேன். நான் செய்ய முயற்சிப்பது உலகில் உள்ள எதைப்பற்றியும் (பொருள், கருத்து, சொல், உணர்ச்சி,…) ஒரு வரையறையை உருவாக்க முயல்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் நம்மால் எதைப்பற்றியும் ஒரு முழு வரையறை செய்ய முடியாது என்பதுதான். இருந்தாலும் ஓரளவிற்கு நெருக்கமாக வரையறை செய்யலாம் என்று நினைக்கிறேன். அந்த வரையறை எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அது புகழ் பெறுகிறது, அது அறிவியலோ, இலக்கியமோ, மதமோ, கடவுளோ, நம்பிக்கையோ, உண்மையோ, இல்லை வேறு எதுவானாலும் சரி. இதுவே நான் என்ன எழுதப்போகிறேன் என்பதற்கான எனது நோக்கம்.

எப்பொழுது எழுதுவேன்….

எனக்குத் தெரியவில்லை, எப்போதெல்லாம் எனக்கு ஒரு சிந்தனை தோற்றம் பெற்று ஓரளவிற்கு வளர்கிறதோ அப்போது நேரம் கிடைத்தால் எழுதுவேன். அப்பொழுது நேரம் கிடைக்கவில்லை என்றால், எப்பொழுது கிடைக்கிறதோ அப்பொழுது எழுதுவேன். எனக்கு எந்த ஒரு கட்டுப்பாடையும் நான் விதித்துக்கொள்ளவில்லை.

எதற்கு எழுதவேண்டும்…

எனது சிந்தனைகளை தொகுத்துக்கொள்ளவே எழுத முடிவு எடுத்தேன். இதைத்தவிர வேறு ஏதாவது ஒரு கருத்து உங்களிடம் இருந்து எனக்கு சரி என்று தோன்றினால் அதையும் சேர்த்து ஒரு முழுமையின் அருகாமையில் வருவதற்கு விருப்பம்.

என்னுடைய படிப்பு (பிழைப்புக்காக படிக்கும் படிப்பைப்பற்றி அல்ல)…

எது கிடைத்தாலும் படிக்க ஆரம்பிப்பேன். அது சிறிது நேரத்தில் என்னைக்கவர்கிறதா இல்லையா என்பதைப்பொருத்து அது தொடர்வது இருக்கிறது.

எனது நன்றிகளுக்கு உரியவர்கள் (பதிவுலகத்தில்)…

நண்பர் கோவி மற்றும் நண்பர் தருமி மற்றும் நான் படித்த அனைத்து பதிவர்கள் (ஏறக்குறைய அனைவருமே). தருமி மற்றும் கோவி என்னுடன் நேரடியாக உரையாடி கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை ஊக்கப்படுத்தியதற்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

நிரந்தர பந்தம் 23 பின்னூட்டங்கள்