தேவை !!!

மார்ச் 1, 2010 at 11:46 முப (சொற்பொருள்) (, , )

எனக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கை, எப்போதும் நாம் தேவையை தெளிவாக அறிந்துகொண்டால் அது நமது இலக்கில் “இருவதிலிருந்து ஐம்பது விழுக்காடு வரை இட்டுச்செல்லும்” என்பது. அதனால் நான் எப்பொழுதும் தேவையைச் சார்ந்தே இயங்குபவனாக இருக்கிறேன். அதனால் எனது பதி உலக  வாழ்க்கையை தேவையிலிருந்தே தொடங்கலாம் என்று நினைத்தேன்.
 
“தேவையை கணக்கில் கொள்ளாத எந்த ஒரு சித்தாந்தமும் / தரிசனமும் / மதமும் / இயக்கமும் தனது அழிவை தானே தேடிக்கொள்கிறது.”
 
தேவையின் அவசியம்…
 
யாருக்கு / எதற்கு எல்லாம் வேண்டும்? அனைத்து உயிர் வாழும் உயிர்களுக்கும் ஏதாவது ஒரு தேவை இருக்கிறது / இருக்கும்.  இருத்தல் என்று வரும்போதே அதற்கான தேவையும் சேர்ந்தே வருகிறது. அது உணவு, உடை, இருப்பிடம் என்று தொடர்ந்து கொண்டே செல்கிறது.
எப்பொழுதும் போல் நாம் நமது சுயநலத் தேவைகளைப் பார்ப்போம்.
 
தேவையை எப்படி எல்லாம் வரையறை செய்யலாம் என்று சிந்தனை செய்தபோது “தனி மனித தேவை மற்றும் சமுதாயத் தேவை”, “அகத்தேவை மற்றும் புறத்தேவை”, “உடனடித்தேவை மற்றும் எதிர்காலத்தேவை”, “அத்யாவசியத்தேவை, அவசியத்தேவை மற்றும் அனாவசியத்தேவை” … என்று வேறு வேறு வகைகளில் பிரிக்க முடிந்தது.
 
உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் இவற்றை தனி மனித அத்யாவசியத் தேவையாக பிரிக்க முடிந்தது. இவை அனைவருக்கும் வேண்டும். இவை கிடைக்கவில்லை என்றால் மற்ற தேவைகளுக்கு எந்த பொருளும் கிடையாது. எப்பொழுதும் இவை கிடைப்பதற்கு தேவையானதை செய்தபிறகு மற்றதேவைகளை பற்றி கவலையை தொடங்கவேண்டும்.
 
உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் இவை சிறுவர்களுக்கு பெற்றோர்களின் கவலையாக இருந்தது / இருக்கிறது / இருக்கும். கல்வியின் தேவை இரண்டு விதமாக அவசியமாக இருக்கிறது ஒன்று நமக்கும் நமது குழந்தைகளின் உணவு, உடை மற்று இருப்பிடம் இவற்றை தேடிக்கொள்ள, இரண்டு நமது அறிவை விரிவுபடுத்த.
 
கல்வியின் தேவையை பெற்றோர்களும் குழந்தைகளும் பகிர்ந்து கொள்ளவேண்டும் (இங்கு படிப்புக்கு ஆகும் பொருளாதாரச்செலவை பற்றி குறிப்பிடவில்லை). பெற்றோர்கள் இந்த கல்வியின் தேவையை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். மேலும் எப்படிப்படிப்பது, எதற்குப்படிக்கிறோம் (இந்த எதற்கு என்பது இப்போதும் இந்தியக்கல்வித் திட்டத்தில் சொல்லித்தரப்படுவதில்லை) என்பதை தெளிவாக குழந்தைகள் அறிந்துகொள்ளும் படி சொல்லித்தரவேண்டும். இதனால் நாம் நமது சந்ததியினருக்கு ஒரு தெளிவான சிந்தனையை அளிக்கிறோம்.
 
சமுதாயத் தேவைகள் உருவாவதற்கு காரணம் இரண்டு தனி மனித (அல்லது குடும்ப) அமைப்பிற்கு இடையே தேவையான ஒரு பொது விதிமுறைகளை உருவாக்குவதற்காகவே. அந்த இரண்டு தனி மனித அல்லது குடும்பம் வளர்ந்து அதிகமான குடும்பங்களை உள்ளடக்க முயலும் போது ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.  இப்படியே அரசன் அல்லது ஒரு அரசு அமைகிறது மேலும் அதற்கான சட்ட திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு சில தாழ்ச்சியும் ஒரு சில உயர்ச்சியும் இருக்கிறது, அதனுடைய முரணியக்கம் அந்த தாழ்ச்சியையும் உயர்ச்சியையும் மாற்றி மாற்றி எழுதிக்கொண்டே இருக்கின்றன.
 
அகத்தேவை என்பது நமது மனதிற்கான தேவையாக வரையறுக்கலாம் என்று நினைக்கிறேன். இதில்தான் கடவுள், காதல், நட்பு, வெறுப்பு போன்ற அக உணர்ச்சி சார்ந்த தேவைகளாக கொள்ளலாம். புறத் தேவைகள் என்பது நமது புற உணர்வுகள் (புலன்களால் உருவாக்கப்படுபவை) நல்ல மணம், இயற்கைக் காட்சிகள், பாடல்கள், கவிதைகள், வீரம் போன்றவை. இந்த புற உணர்சிகள் அக உணர்சிகளை பிறகு தூண்டலாம். எடுத்துக்காட்டாக நல்லதொரு காட்சி (புறம்) நம் மனதை மகிழ்ச்சியை (அகம்)  தூண்டலாம். இதில் அகம் சார்ந்த தேவைகள் பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்தே இருக்கும். இதை நம்மால் மற்றவருக்கு உணர்த்த முடியாது, சொல்லவே முடியும்.
 
மேலும் தேவைகள் என்பது ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு சமூகமோ அவர்களுடைய தேவையை முடிவு செய்யவேண்டும். இதிலிருந்து வெளியில் இருப்பவர் மற்றவருக்காக ஓரளவிற்கு மேல் எதுவும் செய்ய இயலாது. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு அந்த தனி மனிதரின் / சமுகத்தின் தேவையோ புரியவே புரியாது. அதே சமயம் ஒரு தேவை இருக்கிறது என்பதை அறியாத தனி மனிதனோ / சமூகமோ முன்னேறுவது மிகக் கடினம். அதற்கு வெளித் தூண்டல் இருக்கலாம். ஆனால் அந்த வெளித்தூண்டல் அவர்களுக்கு அந்த தேவை இருக்கலாம் (இருக்கும் என்று சொல்லக்கூடாது) என்பதை அறிய வைப்பதுடன் முடிந்துவிடவேண்டும்.
 
எப்பொழுதும் தேவைகள் மாறியபடிதான் இருக்கும் (இதில் உணவு, உடை, இருப்பிடம் வராது), அந்த மாறுதலை அறிந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லை என்றால் ஒருதேவையை நிறைவேற்றும் போது அந்த தேவை இல்லாமல் ஆகி இருக்கக்கூடும்.   
 
அதேபோன்று தேவையை அடையும் வழிமுறையை தெளிவாக வகுத்துக்கொண்டு அணுகும்போது அந்தத்தேவையை அடைவது எளிதாகிறது. அதில் எப்போதும் நமது வழிமுறையின் சாதக பாதகங்களை தொகுத்துக்கொண்டு பாதகங்களை குறைத்தும் சாதகங்களை அதிகரித்தும் செல்லும் போது நமது தேவை எளிதாக நிறைவேறுகிறது.
 
“தேவையை அறிவோம், தேவையை அடைவது நோக்கி செயல்படுவோம்….”
புதிதாக சேர்த்தது.
 
இந்த பதிவை நேற்று முடித்து வீடு திரும்பிய பிறகு எனது மகனின் பள்ளியில் இருந்து (இரண்டாம் வகுப்பு) கிழே குறிப்பிடப்படுள்ளதைப்பற்றி  சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள், இந்த பதிவுடன் தொடர்புடையது என்பதால் இங்கே எழுதி உள்ளேன்.
 
“தேவைக்கும் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாடு…”
Advertisements

நிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்