நம்பிக்கையாளர்களே புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணம்…

மார்ச் 2, 2010 at 11:17 முப (சொற்பொருள்) (, , , , , , , )

இந்த இடுகையின் தலைப்பு “நம்பிக்கை உண்மை பொய்” என்பது மட்டுமே, கொஞ்சம் அனைவரையும் திரும்பிப் பார்க்க மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
 
முதலில் இருப்பும் பிறகு தேவையும் உருவான பிறகு நமக்கு மீதம் இருப்பது அந்த தேவையை எப்படி அடைவது என்ற வழிமுறை. இந்த வழிமுறை முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ள உண்மைகளில் இருந்தோ அல்லது ஒரு சில நம்பிக்கையிலிருந்தோதான் தொடங்க வேண்டும் / முடியும்.
 
இதற்கு நமது முதல் தேவை நம்பிக்கை, உண்மை, பொய் இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை முதலில் உணர வேண்டும்.
 
நம்பிக்கை: நமது மனத்தால் நாம் இது இப்படித்தான் இருக்கும் என்று நினைப்பது, நமக்கு நிருபிக்கப்படாதவரையில் ஒரு நம்பிக்கையே.
 
உண்மை: எந்த ஒரு நம்பிக்கையும் ஒரு சில பரிசோதனைகளால் நிருபிக்கப்பட்டால் அது உண்மையாக ஆகிறது.
 
பொய்: எந்த ஒரு நம்பிக்கை ஒரு சில பரிசோதனைகளால் நிருபிக்கப்படவில்லையோ அது பொய்யாக ஆகிறது.
 
(இங்கு பரிசோதனையின் நம்பகத்தன்மையைப் பற்றி விவாதிக்கவில்லை, அது நம்பகத்தன்மை உள்ள பரிசோதனையாக கொள்ளப்படுகிறது.)
 
இங்கு ஒரு எடுத்துக்காட்டுக்கு மனிதன் பறப்பதை எடுத்துக்கொள்வோம், இது ஒரு 500 ஆண்டுகளுக்கு (சரியான ஆண்டு தெரியாததால் 500 என்று கூறியுள்ளேன்) முன்வரை மனிதன் பறப்பது ஒரு நம்பிக்கையே (பொய் என்று கூறுபவர்களும் இருந்திருக்கலாம்). அங்கே அவன் நம்பிக்கை இழந்து இருந்தால் அதற்கு மேல் எந்த ஒரு முயற்சியையும் செய்து இருக்கப் போவது இல்லை. அவனுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததால் அது மேலும் முயற்சி செய்யப்பட்டு இன்றைய விமானம் கண்டுபிடிக்கப்படுள்ளது. இந்த பறக்கும் முயற்சி ரைட் சகோதரர்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அதில் ஏராளமானவர்கள் ஓரளவுக்கு பறந்தனர், சிலர் பறக்கும் முயற்சியில் இறக்கவும் நேர்ந்தது. அப்போது ரைட் சகோதரர்கள் நம்பிக்கை இழந்திருந்தால் நாம் இன்று விமானத்தில் பறந்திருக்க முடியாது.  இதே போல்தான் எடிசனின் மின்விளக்கும் (2000   முறை முயற்சி செய்தபின்புதான் இதை கண்டுபிடித்தார் என்று கூறப்படுவதுண்டு)
 
நம்பிக்கையும் வர்த்தகமும்…
 
எந்த ஒரு வர்த்தகமும் நம்பிக்கையின் பெயரிலேயே நடத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு வங்கியை எடுத்துக்கொள்வோம், இங்கு யார் வேண்டுமானாலும் சேமிக்கலாம், கடன் வாங்கலாம், அப்போது நம்மைப் பற்றி வங்கிக்கும் வங்கியைப் பற்றி நமக்கும் தெரியாது. வங்கியைப் பற்றி நமக்கு சொல்லுபவர் ஆடிட்டர் (தமிழில் என்ன?) நம்மைப் பற்றி வங்கிக்கு சொல்லுவது, அரசால் நமக்கு அளிக்கப்பட்டு இருக்கும் அட்டை (இடத்திற்கு), நம்முடைய வருமானம் பற்றிய நம்பிக்கை பத்திரம் (கடனை திருப்பி செலுத்த வசதி உள்ளவர்களா என்பதை அறிய). இதை சாதரணமாக நம்பிக்கை இன்மையாக பார்ப்பது பெருகி வருகிறது, அது நமது மேல் நம்பிக்கையை உருவாக்கிகொள்ள தேவையானது என்பதை புரிந்து கொண்டால் இந்த தொந்தரவு இருக்காது. அந்த வங்கியின் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால் இதன் தேவை நமக்குத் தெரியும். அடுத்தது நம்மைத் தெரிந்தவரே வங்கியில் இருக்கும் பொழுது இந்த பத்திரங்களை கேட்கிறார் என்று வைத்துப் பார்க்கும் போது  அது அந்த வங்கி அலுவலர் மீதான நம்பிக்கையைப் பெருக்கிக்கொள்ள தேவை என்பதை உணரலாம்.
 
இது அனைத்து வர்த்தகத்திலும் பொருந்தும். நம்மைப் பற்றிய ஒரு நம்பிக்கையை நாமோ (தேவையான அரசு பத்திரங்கள் அடையாளங்களை கொடுப்பதன் மூலம்) அல்லாத நம்மைப்பற்றி தெரிந்த வேறு ஒரு மனிதரோ அல்லது நிறுவனமோ கொடுக்கும் பொழுது (letter of guarantee) நம்பிக்கை உருவாக்கிக்கொள்கின்றன என்பதை உணரலாம்.
 
நம்பிக்கையும் அரசியலும்…
 
இந்த நம்பிக்கையே அரசியலில் முதலிடம் வகுக்கிறது, எப்பொழுது பெரும்பான்மை தொண்டர்களுக்கு தலைமையின் மேல் நம்பிக்கை இன்மை வருகிறதோ அதன் பின் அந்த ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வது இயலாத ஒன்று என்றே சொல்லவேண்டும். அடக்கு முறையினால் சிறிது காலம் தள்ள முடியும் என்றே கொண்டாலும் அது நிலைப்பதற்கான சாத்தியக்க் கூறு  மிகக் குறைவு. இங்கு தலைமை என்று குறிப்பிடப்படுவதை அரசன் என்றும் கொள்ளலாம். அதே போல் எதிரணியினர் மீதான அவநம்பிக்கையும் (இதுவும் ஒரு நம்பிக்கையே) ஒரு சிறந்த ஆயுதமாக இருக்கிறது. எப்பொழுதெல்லாம் எதிரணியினரின் மேல் உள்ள அவநம்பிக்கை அதிகமாக தூண்டப் பெறுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர்களின் மேலான நம்பிக்கையை தூண்ட ஏறக்குறைய எதுவும் இல்லை என்று சொல்லலாம். இரண்டும் ஒரே சமயத்தில் நடந்தால் அந்தத் தலைவன் ஆட்சியைப் பிடிப்பது / தக்க வைத்துக்கொள்வது மிக எளிதானது.
 
நம்பிக்கையும் கடவுளும் மதமும் மற்றும் கடவுள் / மத மறுப்பாளர்களும்….
 
இதில் மொத்தம் முன்று நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் 1 கடவுள் நம்பிக்கையாளர்கள், 2 மத நம்பிக்கையாளர்கள் 3 கடவுள் / மத மறுப்பாளர்கள் (இங்கு கடவுள் / மத மறுப்பாளர்கள் தனித் தனியாகவும் இருக்கலாம், எழுத்தின் வசதிக்காக சேர்த்து எழுதி இருக்கிறேன்.)
 
1 கடவுள் நம்பிக்கையாளர்கள்
 
இவர்கள் கடவுள் இருக்கிறார் என்பவர்கள், அதை எதிரணியினர் (#3) நிரூபிக்க சொல்லும்பொழுது அது அக உணர்ச்சி தொடர்பானது என்று கூறிவிடுகின்றனர் (இவர்கள் கடவுள் உண்மை என்று நம்புபவர்கள், அக உணர்ச்சியை நிரூபிக்க முடியாதே!) அல்லது அது எனது நம்பிக்கை என்பர் கூறிவிடுகின்றனர் (நம்பிக்கையை நிருபிக்கத்தேவை இல்லை / முடியாமலும் இருக்கலாம் உணர்ச்சி தொடர்பானது எனும் பொழுது.)
 
2 மத நம்பிக்கையாளர்கள்
 
இவர்கள் எனது மதத்தில் அதில் கூறப்பட்டுள்ள கடவுள்(கள்) (அல்லது தர்மம், மகா தரமாம், நிர்வாண நிலை…) , கட்டளைகள்,  வழிமுறைகள் மட்டுமே உண்மையானது மற்றதெல்லாம் அவருக்கு எதிரானது அல்லது ஒரு எதிர் சக்தி அல்லது ஒரு தவறான வழி என்று கூறுவர்.  இதில் இன்னும் சிலர் இதில் அவர்களுக்குப் குறிப்பிடப்பட்டுள்ளதில்  பிடித்தது மட்டும் சரி என்றும் பிடிக்காதவை தவறு என்றும் கூறுவர். அவருக்கு எந்த கருத்தும் இல்லாத ஒரு கருத்தை பற்றி எதுவும் கூறமாட்டார் (ஏனெனில் அது அதைப்பற்றிய ஒரு கருத்து அவருக்கு உறவாகும் பொழுது சொல்லக்கூடும்)
 
3 கடவுள் / மத மறுப்பாளர்கள் (இங்கு கடவுள் / மத மறுப்பாளர்கள் தனித் தனியாகவும் இருக்கலாம்)
 
இவர்கள் கடவுள் என்றோ மதம் என்றோ ஒன்றும் கிடையாது அதுவே உண்மை என்பர் (இது இவர்களின் நம்பிக்கைதான்). இதில் என்ன பிரச்சினை என்றால் எதிரில் இருப்பவர் கடவுள் / மதம் எனது நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் பேசுவதற்கு ஒன்றுமே கிடையாது (எதிரில் உள்ள நம்பிக்கையாளர் அந்த நம்பிக்கையினால் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்துவிட்டால்). ஆனால் இப்போது இருக்கும் தொல்லை இவர்கள் பேசுவது மற்றவரை பாதிக்கும் நம்பிக்கை உள்ளவரிடம் என்று புரியாமல் நான் எந்த தொந்தரவும் செய்யவில்லை ஆனால் கடவுள் இருப்பது உண்மை (இது அவரின் நம்பிக்கைதான்) என்று பேசத் தொடங்கும் பொழுது மறுப்பாளர் தனது கருத்தே உண்மை என்றும் அவர் சொல்லுவது தவறு என்றும் வாதிடுவர். இங்கே நடப்பது உண்மை என்று அவர் அவர் கருதிக்கொண்டிருக்கும் இரு வேறு நம்பிக்கைகளின் மோதல்தான். இன்னும் தெளிவாகச் சொன்னால் இருவருக்கும் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.
 
மறுப்பாளர்களின் ஆகப்பெரிய வாதம் என்பது “இல்லாத ஒரு விஷயத்தை எப்படி நிரூபிப்பது?” (கடவுள் நம்பிக்கையாளர்களிடம் உள்ள ஆகப்பெரிய வாதம் அது எனது அக உணர்ச்சி என்பது) இதில் உள்ள ஒரு தெளிவின்மை என்னவென்றால் அப்படி என்றால் மற்ற அனைத்து உணர்சிகள் நட்பு, காதல், பாசம், வருத்தம் இதெல்லாம் எப்படி மற்றவருக்கு நிரூபிப்பது? ஒரே வேறுபாடு இதை மறுப்பாளர்கள் உணர்த்து இருக்கின்றனர் கடவுள் என்ற உணர்ச்சியை உணர்ந்ததில்லை என்பதை விட? அப்படி என்றால் உணராத உணர்ச்சி எல்லாம் இல்லாததா? சரி அக உணர்ச்சியில் இல்லாமல்  புற பொருட்களிலாவது இல்லை என்று நிரூபிக்க முடியுமா? என்றால் எந்த ஒரு பொருளைப் பற்றியும் யாருக்கும் முழுமையான அறிவு இல்லை (மிகச் சிறியதான அணுத் துகள்களைப் பற்றியும் முழுதும் அறிய இயலவில்லை, மிகப்பெரிய பிரபஞ்சத்தையும் முழுதும் அறிய இயலவில்லை, நடுவில் உள்ள எந்த பொருளையும் இன்னும் முழுதும் அறிய இயலவில்லை….). இன்னும் அறிவியல் தேடிக்கொண்டுதான் இருக்கிறது, இருக்கும். அப்படி என்றால் நமக்கு முழுமையாக தெரியாத பொழுது அது உண்மையின் அருகில் என்றுதான் கூற முடியும், நம்பிக்கைக்கும் இடம் இருக்கிறது என்று பொருள்.
 
இதிலிருந்து தெரிவது நம்பிக்கை இல்லாமல் வாழவே முடியாது, (முடியும் என்று ஒரு நம்பிக்கையும் இருக்கலாம்) ஒவ்வொரு நம்பிக்கையும் ஏதோ ஒரு தேவை (முக்கியமாக உளவியல், பொருளியல், வாழ்வியல்) கருதி அமைக்க / மாற்றி அமைக்க படுகின்றன. 
 
நமது நம்பிக்கையை மற்றவரின் பேரில் திணிக்காமல் அவர்களுடன் உரையாடி (வாதம் / விவாதம் செய்து அல்ல) நமது நம்பிக்கையை மாற்றி அமைத்து மிகச் சிறந்த மற்றவருக்கு தொந்தரவு இல்லாத நல்ல நம்பிக்கையை அடைவோம்.  
Advertisements

நிரந்தர பந்தம் 6 பின்னூட்டங்கள்